Sunday, September 25, 2016

திருச்சிற்றம்பலம்
ஞானப்பிரகாச மாலை
வித்துவான் கா. . கண்ணப்பன், பி. லிட்.
திருத்தருமபுரம், மாயூரம் - 609001

சிவஞான பூஜா மலர் துன்மதி ஆண்டு - (1981)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]

தருமை குருமுதல்வர்
      திருக்கயிலாய பரம்பரைத் திருத்தருமையாதீனத்தைத் தோற்றுவித் தருளியவர் ஶ்ரீ குருஞானசம்பந்தர். ஶ்ரீ வில்லிபுத்தூரில் அவதரித்தவர். மதுரையில் அம்மையப்பர் அருளால் சிவபூசைப் பெட்டகம் பெற்றவர். திருவாரூரில் (கமலை) ஞானப்பிரகாசரிடம் தீட்சை பெற்று உலகம் உய்ய எட்டு அருள் ஞான நூல்களை அருளிய அருமைப்பாடு உடையவர். இக்குரு முதல்வர் அருளிய நூல்களைஶ்ரீ குருஞான சம்பந்தர் அட்டகம்என வழங்குவர்.
      (அஷ்டகம்எட்டு நூல்கள்( அவையாவன: -
      1.     சொக்கநாத வெண்பா
      2.     சிவபோக சாரம்
      3.     சொக்கநாதக கலித்துறை
      4.     ஞானப்பிரகாச மாலை
      5.     திரிபதார்த்த ரூபாதி தசகாரிய அகவல்
      6.     சோடசகலாப் பிராசாத ஷட்கம்
      7.     முத்தி நிச்சயம்
      8.     நவரத்தின மாலை.
      இந்நூல்கள் சைவ சித்தாந்தக் கருத்துக்களை விளக்குவனவாக அமைந்திருப்பதுடன் இலக்கிய இன்பம் பயக்கும் இன்சுவைத் தேனாகவும் விளங்குகின்றன. ஶ்ரீ குருஞான சம்பந்தர் அருளிய வெண்பாக்கள் மிகச் சிறப்பான முறையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வெண்பாக்களில் அமைந்துள்ள எதுகைத்தொடை அமைப்புச் சிறப்பான முறையில் உள்ளமை, இவர் பாடல்கள் எளிதில் மனப்பாடம் ஆதல் கொண்டு உணரலாம். இவரது கட்டளைக் கலித்துறைப் பாக்கள் ஓசை நயம் மிக்கன.
ஞானப்பிரகாச மாலை
      இவ்வினிய நூல் 36 கட்டளைக்கலித்துறைகளைக் கொண்ட சிறந்த நூல். ஶ்ரீ குருஞானசம்பந்தர் தம் குருநாதர் மீது பாடியருளிய நூல். ஶ்ரீ கமலைஞானப்பிரகாசர் மீது தாம் கொண்ட பக்திப்பெருக்கை புண்ணிய கங்கையாக ஓட விட்டிருக்கிறார் ஆசிரியர். அகச்சான்றுகளும், சித்தாந்தக் கருத்துக்களும், உவமை, பழமொழி, மரபுத் தொடர்களும், செஞ்சொலாட்சியும் கொண்டு மிளிரும் இந்நூல், கற்போர்ர்கு இலக்கியவிருந்து நல்கும் மாட்சியைக் காண்போம்.
குருவருள்
      ஶ்ரீ குருஞானசம்பந்தர் மதுரைப் பெருமான் திருவருளால் தாம் பெற்ற சிவலிங்கத்தை விதிப்படி பூசிக்க வேண்டும் என விரும்பினார். சற்குருநாதர் தேவை என உணர்ந்தார். மதுரைச் சொக்கேசப் பெருமானை வழிபட்டுத் துயின்றார். பெருமான் கனவில் தோன்றித்திருவாரூரில் ஞானப்பிரகாசரிடம் சென்று அருள் பெருகஎன அருளினார்.
      இங்ஙனமே குருஞானசம்பந்தருக்கு அருளுமாறு ஞானப்பிரகசருக்கும் அறிவித்தருளினார். திருவாரூர்க் கோயில் தட்சிணாமூர்த்தி சந்நிதியில் தமது குருநாநதரைக் கண்ட குருஞானசம்பந்தர் காந்தம் கண்ட இரும்பென நெருங்கி, வணங்கி மகிழ்ந்து நின்றார். கமலை ஞானப்பிரகாசரும் இவரைக் சீடராகக் கொண்டு பெருமான் திருவருளை எண்ணித் தம் திருவடியை முடிமேல் வைத்துத் தீட்சை நல்கி, உபதேசம் பல செய்து தம்மொடு இருக்கச் செய்தார். இக்காலை நிகழ்ந்த குருவருள் அனுபவத்தை நினைந்து நினைந்து பண்டாரக் கலித்துறையாகிய ஞானப்பிரகாச மாலையில் பாடியுள்ளமை அகச்சான்றாக அமைதலைக் காணலாம்.
      ஞானப் பிரகாச உன்றன் மலர்ப் பதத்தை நாயேன் சிரத்தணிவித்தாள் (பா. 21)
எனவும்,
      வரந்தரு பாதமென் சென்னியில் தோய்ந்திடவைத் தெடுத்தான் (பா. 36)
எனவும் அவரது அனுபவங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. மேலும் இந்நூல் 36 ஆம் பாடலில்,
      பரந்திரு கண்ணினை தன்னினில் காட்சி பதித்து வைத்தான்
என்ற தொடர்
      தெளிவு குருவின் திருமேனி காண்டல்
என்பதனை விளக்குவதாகவும்
      தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே
என்னும் மந்திர விளக்கமாகவும் அமைதல் கருதத்தக்கது.
                வல்லான் கமலையுள் ஞானப்ர காசன் வசனமுணர்ந்து
       எல்லாம் வெறும் மித்தை என்று கண்டேன்(பா. 7)

என்ற தொடரின் வாயிலாகக் குருவார்த்தை கேட்டுச் சிந்திக்கும் பக்குவம் மிக்க நற்சீடரின் நல்லுணர்வை அறியலாம்.
சமய நெறி
      ஞானம் பெறுதலே வீட்டிற்கு நேர்வாயில், பாச வீடு பெற்றாலே ஞானம் சித்திக்கும். அந்த ஞானம் குருவருளால் கிடைப்பது, குருவும் சிவனே ஆவன். ஆன்மாக்களது பக்குவத்திற்கு ஏற்ப, சிவன் அருளுவன், பாச நீக்கம் பெற்றுக்குரு அருளில் திளைத்தோர் பிறவர் நெறியுடையர் ஆவர் இது சைவ சமய நெறி.
      ஶ்ரீ குருஞானசம்பந்தர் இந்நெறியை மிக அற்புதமாகத் தமது ஞானப்ரகாச மாலையில் விளக்கி அருள்கிறார்.
                1.     “ஞான ப்ரகாசன் திருவடிக் கீழ், வருவாரவர் வழிவாரான் சமனும்,
              மலரயனும் கருவாய் இடுதற் கெண்ணான்(பா. 1)
      
2.     “ஞான ப்ரகாசன் அடியவர் எனும் பேரே படைமின்
              அதுபோதும் போதும் பிறப்பறவே(பா. 8)
      
3.     “ஞானப்ரகாசன் என் சிந்தையுள்ளே சிவானுபவம் தரப் பெற்றதனால் வாராது சென்மமும், போகாது பேரின்ப வாரியுமே(பா. 12)
      
4.     “உள்ளத்தில் ஒன்றும் புறத்தொன்றுமாக உரைக்கும் அன்பில்
              கள்ளத்தவர்க்கு இரங்காதளிக்கும் கடைப்பிறப்பே
      
5.     “ஞானப்ரகாச பரம என்றும் கடிதாய் வயிற்றினிலே
              யுறலோ? இனிக் காயமுற முடியாது(பா. 23)
       6.     “கருராசி தீர்க்கும் கமலேசன்(பா. 31)

       7.     “மதுரேசன் சம்பந்தன் வாழ் மடத்தின் திருவாசலிற்
              …செல்பவர் கருவாசலிற் செல்வரோ

என்னும் மேற்காணும் தொடர்கள் குருவருள் பெற்றுப் பிறவாப் பேரின்பநிலை எய்தலாம் என உணர்த்தும் சான்றுகளாக இந்நூல் மொழிவனவாம்.
குருவே சிவன்
      “குருவே சிவன் எனக் கூறினன் நந்திஎன்பது திருமூலர் திருவாக்கு. இக்கருத்தினை வலியுறுத்தும் வகையில் ஞானப்பிரகாச மாலை மொழிவன காண்போம்.
      1.     “ஞானப் பிரகாச சிவன்” (பா. 3)
       2.     “சற்குருத்தனை ஈசன் என்று எண்ணார் நரகிற் குடி மக்களே” (பா. 5)
       3.     “புரமூன்று எரித்த வல்லாய்” (பா. 9)
4.     “முப்பாசம் என்னைத் தடுத்தது என்றால் செப்பார் உனைச் சிவம் என்னா” (பா. 10)
      5.     “இவுளி நரித்திரன் ஆக்கி வைத்தோன், இசைப் பாணனுக்குப்
              பவுளி உரைத்தருள் ஞானப்ரகாசன்” (பா. 19)
       6.     “சித்தம் தென்ன எல்லாம் வல்லவன்” (பா. 20)
7.     ……“கயிலை வாசன் செழுமதி மானும் மழுவும் மறைத்துவைத்த நேசன்” (பா. 28)
       8.     “மதுரேசன் சம்பந்தன்” (பா. 34)
       9.     “கூடலில் வாழ் ஞானசம்பந்த போதகன்” (பா. 36)
என்னும் மேற்காணும் சான்றுகளில் இறைவன் செயல்களைக் குருவின் செயல்களாக்கி உரைத்த பாங்குகுருவே சிவன்எனும் கொள்கையை வலியுறுத்தும்.
      இவற்றுள் மதுரேசன் சம்பந்தன் கூடலில் வாழ் ஞான சம்பந்த போதகன் என்னும் தொடர்கள் காசியில் ஶ்ரீ காசிமடத்தைத் தோற்றுவித்தவரும் தருமையாதீனம் நான்காம் குருமணியாகிய ஶ்ரீ மாசிலாமணித் தேசிகரிடம் ஞானதீட்சை பெற்றவரும் ஆகிய ஶ்ரீ குமரகுருபர சுவாமிகள், தம் குருநாதரைத் துதித்துப் பாடியருளிய பண்டார மும்மணிக் கோவையில் தருமையும் கமலையும் விரிதமிழ்க்கூடலும் திருநராக அரசு வீற்றருளி என வழுத்தும் தொடருக்கு வழிகாட்டியமைதலை எண்ணி இன்புறலாம்.
உவைமகள்
      பக்குவம் என்பது எல்லாவற்றிற்கும் தேவை; நிலத்திற்கும் தேவை; புலத்திற்கும் வேண்டுவதே! பக்குவமற்ற பூமி பயந்தரல் இல்லை. பயன் தர வேண்டுமென்றால் செத்திப் பண்படுத்த வேண்டும். பண்பட்ட நிலத்தில் விதைக்கப் பெற்ற நட பெற்ற செந்நெல் பயன் தரும்.
      புத்தியும் அப்படித் தான்! கடின புத்தியில் எதுவும் ஏறாது; பயனற்றது. புத்திக் கடினம் கரைந்துமென்மையுற்றால் தான் உபதேசம் விளையுமாம்! குருநாதரே உழவர்அவர் பண்படுத்துகிறார்; ஞானப் பயிர் விளைக்கிறார். எத்தனை அருமையான உவமையை எவ்வளவு அழகாகக் காட்டுகிறார் குருஞானசம்பந்தர்.
                செத்திப் படுத்தித் தெளிவாக்கிச் செந்நெல் விளைப்பது போல்
       புத்திக் கடினம் கரைத்த மன்னே

என்பது இனிய உவமைத் தொடர்ன்றோ!
      சிவன், மாற்றுமிக்க பதினாயிரம் பொன்னாலாகிய தன் மாலையையும் அணிந்துள்ளான். புல்லையும் அணிந்துள்ளான். கல்லையும் ஏற்றான்; எலும்பும் இறகும் கூட அவனுக்கு விலக்கு இல்லை! ஏற்கின்றான் சிவன். கருதிப் பார்க்கிறார் குருஞான சம்பந்தர். ‘ஞானப் பிரகாச சிவனாகிய ஆரூரன் அன்பர் உரைக்கும் துதியுரைகள் மட்டுமல்ல என் அன்பில் சொல்லும் ஏற்பன்எனந்துணிகின்றார். பாடல் மலர்கிறது.
                பொன்பதி னாயிரம் மாற்றுள்ள மாலையும் புல்லும் கல்லும்
       என்பும் இறகும் தரித்தது போல்என்ற இனிய உவமை

பொதிகின்றது. இப்பாடற் பகுதியில்புல்லும் கல்லும்என்பதற்குப் பொருந்தும் கல் எனவும் பொருள் கொள்ளலாம்; சாக்கிய நாயனார் வரலாற்றை இச் சொல் நினைவூட்டியமைகின்றது. என் அன்பில் சொல்லும் இன்புடன் ஏற்றருள் என இப்பாடல் வாயிலாக வேண்டுகிறார் குரு ஞானசம்பந்தர்.
      மேகம் மழை பொழியும், உலக நன்மை ஒன்றே மேகத்தின் பயன்! “கைம்மாடு வேண்டாக்கடப்பாடு மாரி மாட்டுஉண்டு. மேகத்தைக் கண்டவுடன் மயின் ஆடும். மேகத்தின் தன்மை கண்டு மயில் மகிழ்வு கொள்ளும். குருவின் திருவடிகள் மேகம்! அத்திருவடிகள் உலக நன்மையின் பொருட்டு இன்னருள் மழை பொழிகிறது. இச்சிறப்பு மிக்க திருவடிகளைக் காணும் உலக உயிர்கள் மகிழ வேண்டாவோ? சிந்தனை பாடலாகிறது.
                வான் கண்டு உளம்களிகூர் மஞ்ஞை போல் உன் மலர்ப்பதத்தை
       நான் கண்டு உளம் களி கூர்வது எந்நாள்!”

உயிர்களின் ஏக்கத்தை உவமையாக்கிக் காட்டி, உலக உயிர்கள் குருவருள் பெறத் துடித்திட விழைதல் வேண்டும் என்கிறார் குருநாதர்.
      வானே எழுமதி காணாச் சகோர மனமது போல் ஆனேன்
என்ற மற்றோர் உவமையால் எப்போதும் குருநாதர் சந்நிதியில் இருக்கும் பேறு எய்த வேண்டும் என விண்ணப்பிக்கிறார்.
பழமொழிகள்
      கருத்து வெளிப்பாடுகள் உவமை, பழமொழி, மரபுத் தொடர்கள், செஞ்சொற்கள் வாயிலாக அமையும் போது தேனொடு பால் கலந்து அளித்தா இன்சுவையுடைத்தாகும். இந்நிலையில் குருஞானசம்பந்தர் பழமொழி முதலியவற்றைத் தக்க இடத்தில் சுவை பொருந்த அமைத்திருத்தல் சிந்தித்து மகிழத்தக்கதாகும்.
      1.     சற்குரு பராமுகமாக இருந்தால் சீடனின் நிலை வாயற்றசெயலற்ற தன்மை உடையதாகும். குரு பராமுகமாய் இருத்தல் இல்லை என்பதைத்
      தாயே கொல எண்ணில் ஆர்காப்பர் சேயினை!” என்ற உலக வழக்கு நிலையில் எடுத்துக் கூறல் இன்பம் அளிப்பதாய் உள்ளது.
      2.     குருநாதரைத், தாயாகத், தந்தையாகக், குருவாகத், தெய்வமாக எண்ணுதல் வேண்டும் என்பதை
      “மாதா பிதா குரு தெய்வம் துணை என்பர் மக்கட்கு உன்றன்
      பாதாரவிந்தம் அடியேற்கு அந்நான்கு
என விளக்குகிறார்.
செஞ்சொல் ஆட்சி
      ஞானப்பிரகாச மாலைத் திருப்பாடல்கள் இனிய சொல்லாட்சி அமைந்தனவே. இந்நூற்கள் பிரட்டு (3) மித்தை (7) சங்கற்பம் (9) கள்ளத்தவர் (13) சந்தை (14) தேசன் (2, 1, 28) பவுளி, இவுளி, ஏகவுளி (19) வாசல் (34) என்னும் சொற்களை ஆண்டிருக்கும் திறன் ஆய்வுக்கு வித்தாய் அமைதல் காணலாம். மேலும்முத்திநிச்சயமே” (2) என்று அருளிய தொடரே பின்னர் நூற்பெயர் ஆதல் எண்ணவூட்டுத் தருவது. “முத்திக் கொடி கட்டினான்” (3) “முத்திக் கொடி ஆள்பவன்” (5) என்னும் தொடர்கள் குருநாதரின் பெருமை கூறும் நற்றொடர் ஆட்சிகளாம். “தித்திக்கச் சொன்னவன்என்ற மரபுத் தொடர் தித்திக்கின்றதன்றோ!
யாப்பு
      நேரிசையில் தொடங்கும் கட்டளைக்கலித்துறைப் பாக்கள் 23ஐயும், நிரையசையில் தொடங்கும் பாக்கள் 23ஐயும் ஆக 36 பாடல்களைக் கொண்டு இம்மாலை ஞானப்பிரகாசமாக மிளிர்கிறது. நேரகைபில் தொடங்கும் கட்டளைக்கலித்துறைப் பாடல் (மெய், குற்றியலுகரம் நீங்கலாக) 16 எழுத்துக்களை உடைத்தாதல் வேண்டும். நிரையசையில் தொடங்கும் பாடல் (மெய், குற்றியலுகரம் நீங்கலாக) 17 எழுத்துக்களைக் கொண்டதாதல் வேண்டும். பதிப்புகளுள்,
      ‘தேனே ககலையுள் ஞானப்ரகாச தேசிக நீஎனத் தொடங்கும் 32 ஆம் பாடலில் முதலாவதாகிய இவ்வடி நேர் அசைத் தொடக்கம் கொண்டு 15 எழுத்துக்கள் பெற்றிருக்கிறது. இது சுவடிகளில் 16 எழுத்துப் பெற்றிருந்ததாதல் வேண்டும். பெயர்த்து எழுதுங்கால் மாறுபாடு நிகழ்ந்திருக்கக் கூடும்.
      கட்டளைக்கலித்துறையில் எதுகையமைப்புச் சிறப்புடன் அமைந்திருக்கும் இந்நூலில் விதம்பர லோகன் (24) என்று தொடங்கும் பாடல் எதுகை நயமுடன் அமைந்திருக்கக் காணலாம். வடசொற் புணர்மொழி எதுகை இதன் கண் மிளிர்கின்றது. ‘விதம்பர லோகன், சிதம்பரநாதன், சிதம்பரம் பதம்பரமானந்தம் என அமைகின்றது. இத்தகைய எதுகை அமைப்புக் கடினமானது என்பதைப் பாப்புனை யாப்பினர் நன்கு அறிவர்.
நிறைவுரை
      தருமை முதற்குரவரது பாக்களின் இனிமையையும் பெருமையினையும் ஒரு சிறிய கட்டுரையில் அடக்க முயலல் கடலைக்குடத்துள் அடக்குவேன் என்றல் போல்வது. கடின யாப்பாகிய கட்டளைக் கலித்துறையில் இனிய சித்தாந்தக் கருத்துக்கள் பலவற்றை உவமை முதலிய நயங்களுடன் பாடியிருகும் திறன் குருவருளே! சமுதாயத்தில் நல்லுணர்வு வளர வேண்டுமெனில் குருவருள் விளக்கும் தலைமணி நூலாகிய ஞானப்பிரகாச மாலையைப் போற்றிப் பாராயணம் செய்தல் வேண்டும்.
குருவருள் போற்றிக் குவலயம் வளர்க

சிவம்.

No comments:

Post a Comment