Monday, September 5, 2016

சிவமயம்
ஶ்ரீ சூரிய சிவாசாரியாராலியற்றப் பெற்ற
சைவ சித்தாந்த பரிபாஷை

(தமிழ் மொழி பெயர்ப்பு)

[சிவஞான பூஜா மலர்துந்துபி ஆண்டு - (1982)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]

நூன்முகம்

      “உலகம் தோன்றி நின்று மறைதல் கண்கூடாகக் காணப்படுதலின், இம்முத்தொழில்களைச் செய்யுன் வினை முதலாகிய கடவுளும், தோன்றி நின்று மறைதலால் பயன் பெறும் உயிரும், தோன்றுதற்கும் ஒடுங்குதற்கும் முதற் காரணமாகிய மாயையும், அந்த மாயையிலிருந்து பலவேறு விதமான காரியங்கள் தோன்றுதற்குக் காரணமான கன்மமும், அக்கன்மம் பலவேறு வகைப்படுதற்குக் காரணமான ஆணவமலமும், அந்த ஆணவமலம் பக்குவமாதற் பொருட்டு மாயா காரியங்களைத் தோற்றுவித்து, அவற்றுடன் உயிர்களைக் கூட்டுவித்து அவற்றிலழுந்தி அனுபவிக்கச் செய்யும் திருவருளாகிய திரோதான சத்தியும், அவ்வனுபவத்தால் பக்குவமடைந்த உயிர்களுக்கு மலசத்தி நீங்கும் படிக்கும் சிவனோடு பிரிப்பின்றி நிற்கும் உயிரின் உண்மை நிலை விளங்கும் படிக்குஞ் செய்யும் அனுக்கிரகமும் என்னும் இவை சைவசித்தாந்த நூல்களிற்றான் கூறப்படுகின்றன. ஏனைய சமயநூல்களில் கூறப்படவில்லை.
      பிறநூல்களில் முடிவாகக் கூறப்பட்ட பொருள்களைப் பூருவபக்கமாகக் கூறி அவற்றிற் கூறப்படாத பொருளை முடிவாகக் கூறுதலானும், சைவநூல்களில் முடிவாகக் கூறப்பட்ட பொருள் பிற நூல்களில் அநுவதித்துப் பூருவ பக்கம் பண்ணப்படாமைமானும், சைவ சாத்திரங்கள் சித்தாந்தம் எனப்பட்டன. இத்துணைப் பெருமை வாய்ந்த சைவ சித்தாந்த சாத்திரங்களிற் கூறப்படும் பதி-பசு-பாசம் என்னும் முப்பொருள்களின் உண்மையை உணர்த்தும் பிரமாணங்களையும், அந்த முப்பொருள்களையும், அவற்றின் உபயோகத்தையும் பல நூல்களின் கருத்தைத் திரட்டித் தொகுத்து மிக நுட்பமாகவும், ஆயுந்தோறும் ஆயுந்தோறும் இன்பம் பெருகுதற்கேதுவாகவும், சைவ சித்தாந்த பரிபாஷை என்னும் பெயருடன் ஒரு அருமை வாய்ந்த நூலை ஶ்ரீ சூரிய சிவாசாரியர் இயற்றி வைத்தனர்.
      இந்நூல் உபோத்காத பரிச்சேதம், பிரமாண பரிச்சேதம், பதி பரிச்சேதம், பசு பரிச்சேதம், பாச பரிச்சேதம், விநியோக பரிச்சேதம் என்னும் ஆறு பரிச்சேதங்களை உடையது. ஒவ்வொரு பரிச்சேதத்திற் கூறப்படும் அருமையான விடயங்கள் விடய அட்டவணையிற் காட்டப்பட்டிருக்கின்றன. இந்நூலாசிரியர் வழுவூரை வாசத்தானமாக உடையவர் என்பது மங்கலவாழ்த்தால் அறியக்கிடக்கின்றது.”
      மேலே கொடுத்துள்ளது தேவகோட்டைச் சிவகாம சித்தாந்த பரிபாலன சங்கத்தாரால் 1928-ம் ஆண்டு (விபவ-சித்திரை) வெளியீடப்பட்ட சைவ சித்தாந்த பரிபாஷை என்ற தமிழ் மொழிபெயர்ப்பு நூலில் உள்ள முகவுரைப் பகுதியாகும். சூரிய சிவாசாரியார் வடமொழியில் இயற்றிய இந்த நூலை தேவகோட்டை சங்கத்தார் முதலில் வடமொழியிலும், பிறகு தமிழ் மொழி பெயர்ப்பும் வெளியிட்டனர். இந்த தமிழ் மொழி பெயர்ப்பு நூலின் ஒரு பிரதியினை மிகவும் சிதிலமடைந்த நிலையில், தூத்துக்குடி சித்தாந்த போதகாசிரியர் திரு. .சி.. இராமர்சங்கு பாண்டியன், பி.., அவர்கள் எம்மிடமளித்து, இந்த நூலை எமது சிவஞான பூஜா மலரில் ஆண்டுதோறும் ஒவ்வொரு பகுதியாக வெளியிட்டு விட்டால் நூல் பாதுகாக்கப்பட்டதாக ஆகும் என்றும், இந்நூலை இதுகாறும் படிக்காதவர்களும் இதனைப் படித்தறிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறினார்கள். நூல் முழுமையும் படித்துப் பார்த்து, இது சித்தாந்தச் சார்புடைய சிறந்ததொரு நூலாகையால், சைவப் பெருமக்களுக்குப் பயன்படும் வகையில் இதனை எமது சிவஞான பூஜா மலரில் ஆண்டுதோறும் பகுதி பகுதியாக வெளியிடுவது என்று முடிவு செய்தோம்.
      ஆயினும், எமக்குக் கிடைத்த பிரதி, தேவகோட்டை சிவகாம சித்தாந்த பரிபாலன சங்கத்தாரால் வெளியிடப்பட்டதாகலின், அவர்களது ஒப்புதல் பெற்றே இப்பணியில் முயல வேண்டும் என்ற கருத்துடன், சங்கத்தின் தலைவர், “தருமபுர ஆதின வித்வான், திருவண்ணாமலை ஆதின விரிவுரையரசு, மதுரை ஆதினச் சித்தாந்த சைவ வித்தகர், சித்தாந்தப் புலவர் மாமணி, பெரும்புலவர், பாலகவிதிரு. வயிநாகரம் வே, இராமநாதன் செட்டியார் (தத்புருஷ தேசிகர்) அவர்களுக்கு எழுதினோம். 1981-வது ஆண்டு எம்மால் வெளியிடப்பட்ட சிவஞான பூஜாமலர் பிரதியினையும் அனுப்பினோம். அவர்களும் மனமுவந்து தமது ஒப்புதலை ஆசிச்செய்தி வடிவமாக வழங்கியருளினார்கள். அவர்களது ஆசியுரையினைக் கீழே காண்க.

சிவமயம்
17-11-82
பேரன்புடையீர்! நலம், நலமே தழைக.
      உங்கள் 7-11-82 கடிதமும் சிவஞான பூஜா மலரும் கிடைத்தன.
      சைவசித்தாந்த பரிபாஷை சித்தாந்த சைவச் சார்பு நூல்களில் ஒன்று. அதைப் பகுதி பகுதியாக நீங்கள் அச்சிட்டு வெளியிட எண்ணியிருப்பதறிந்து மகிழ்ச்சி. உங்கள் நன்முயற்சி உரிய பயனைத் தருவதாக.
அன்புள்ள
தத்புருஷ தேசிகர்.


ஶ்ரீ சூரிய சிவாசாரியாரால் இயற்றப்பெற்ற
சைவ சித்தாந்த பரிபாஷை
(தமிழ் மொழி பெயர்ப்பு)

முதலாவது *உபோத்காத பரிச்சேதம்
விடய அட்டவணை

[* உபோத்காதம்முன்னுரை. பரிச்சேதம்பிரிவு]
1.     மங்கலஞ் செய்தல்.
2.     நூலாசிரியரின் பிரதிஞ்ஞை.
3.     காமிகாகமத்தின் முதற்சூத்திரத்துக்குப்பொருள் கூறல்.
4.     மலத்தின் பரிபாகத்திற்காகவே, பரமசிவன் படைத்தல் முதலிய தொழில்களைச் செய்கின்றான்.
5.     பரமசிவனே வழிபடத்தக்கவன்.
6.     தீக்ஷையுடையோரே பரமசிவனை வழிபடுதற்குரியர்.
7.     ஆசிரியத்தன்மை சித்தாந்த சாத்திரங்களாலுண்டாம் ஞானத்தால் சித்திக்கத் தக்கது.
8.     பதி, பசு, பாசங்கள் என்னும் பொருள்கள் சித்தாந்த சாத்திரங்களைத் தவிர வேறு சாத்திரங்களில் சொல்லப்படாமையும், அதற்குக் காரணமும்.
9.     வேதங்கள், ஈசுவரனால் இயற்றப் பெற்றமை பற்றியே எல்லாப் பொருள்களையும் அறிவிக்கின்றன. நித்தியமாயிருக்கின்றமை பற்றி அறிவிக்குமென்றல் பொருந்தாது.
10.    வேதங்கள் மாறுபட்ட பல சமயிகளின் ஐயத்துக்கிடமாய் இருப்பன.
11.    சிவாகமங்கள் ஐயத்தை நீக்கித் தெளிவித்து வேத சாரமாய் விளங்குவன.
12.    ஆசிரியத் தன்மைக்கு அதிகாரமிருத்தல் பற்றிப் பந்தத் தன்மை நிகழுமே என்னும் வினாவிற்கு விடை.
13.    ஆசிரியனுக்குப் பதியோடு சமத்தன்மை உண்டென்பதை விளக்கல்.
14.    பதியுடன் சமத்தன்மையிருத்தலால் ஆசிரியன் ஈசுவரனால் ஏன் ஏவப்படுகிறானென்னும் வினாவுக்கு விடை.
15.    ஆசிரியத்தன்மை அபரமோக்ஷம்.
16.    நிருவாண தீக்ஷையுடையவனே சாதகன். அவன் சித்தாந்த சாத்திரங்களை அறிதற்குரியவன்.
17.    சமயதீக்ஷை பெறுதற்குரியார் இவரெனல்.
18.    விசேடதீக்ஷை பெறுதற்குரியார் இவரெனல்.
19.    நிருவானதீக்ஷை பெறுதற்குரியார் இவரெனல்.
20.    சமயதீக்ஷை பெற்றவனுக்குப் பசுத்தன்மை நீங்கவில்லையாயினும், விசேட தீக்ஷை பெற்றவனுக்குப் பசுத்தன்மை நீங்கினமையால், சித்தாந்த சாத்திரத்தைக் கேட்பதற்கு உரிமையில்லை என்பது எவ்வாறு கூடுமென்னும் வினாவிற்கு விடை.
21.    நிருவான தீக்ஷையினாலேயே பாசமனைத்தும் நீங்கினமையால் ஆசாரியாபிஷேகம் வேண்டாமே என்னும் வினாவிற்கு விடை.


நூல்

முதலாவது உபோத்காத பரிச்சேதம்

      வழுவூரையும், அவ்வூரின்கண் விளங்கும் நின்மலமான பொற்றாமரையையும், அவ்வூரின்கண் திருக்கோயில் கொண்டெழுந்தருளியிக்கும் இளங்கொம்பனௌயாளம்மையையும் திருவீரட்டநாதரையும் வணங்குகின்றேன்.
      எந்தத் திருவீரட்டநாதருடைய சந்நிதியானது, எல்லாவுயிர்களுக்கும் எவ்விடத்தும் எக்காலத்தும் எல்லாப் புருடார்த்தங்களையும் கொடுத்தருளுகின்றதோ, அந்தப் பரஞ்சோதி ரூபமான திருவீரட்டநாதருக்கு வணக்கஞ் செய்கின்றேன்.
      எந்தப் புருடன் சமயம் விசேடம் முதலிய தீக்ஷைகளைப் பெற்றுச் சைவசாத்திரங்களைச் சிரமமின்றிப் படிக்க விரும்புகின்றானோ, அந்தப் புருடனுக்கு உபகாரமாக என்னால் இந்தச் சைவ சித்தாந்தப் பரிபாஷையானது யுத்தியுடன் சுருக்கிக் கூறப்படுகின்றது. (பரிபாஷைகுழுஉக்குறி. அஃதாவது ஒவ்வொரு கூட்டத்தார் வழங்குஞ் சொல்.)
      அநாதியே மலமில்லாதவனாயும் எல்லாவற்றையும் அறிபவனாயும் எல்லாவற்றையுஞ் செய்பவனாயுமிருக்கிற பரமசிவன், ஆணவமலம் கன்மமலம் மாயா மலங்களால் அநாதியே எல்லாவற்றையும் அறியுந்தன்மையும், எல்லாவற்றையுஞ் செய்யுந்தன்மையும் தடுக்கப்பட்டுள்ள உயிர்வர்க்கங்களுக்கு, அந்தப் பாசங்களின் சேர்க்கையை நீக்குகின்றானென்பது ஶ்ரீ காமிக ஆகமத்தின் முதற்சூத்திரத்தின் பொருளாகும்.
      இதன் கருத்தாவது, எல்லாப் பொருள்களையும் தடையின்றி இயல்பாகவே அறிகின்ற ஞானக்கிரியா சத்திகளை உடையவனாயிருத்தலால் பதியென் நின்ற பரமசிவன். அநாதியே (இயல்பாகவே) பாசத்தின் சேர்க்கையால் தன்னைப்போலாகாது வேறுபாட்டையடைந்து (அஃதாவது எல்லப் பொருள்களையும் அறியமுடியாத தன்மையை அடைந்து) பசுரூபர்களான ஆன்மாக்களிடத்துக் கருணையுடையனாய், அவ்வான்மாக்களுக்கு ஞானக்கிரியைகளைத் தடுத்தலால் பாசங்களென்று வழங்கப்படும் ஆணவமலம் கன்மமலம் மாயா மலங்களை நீக்கித் தன்னுடைய * தர்மம் போன்ற முற்றுணர்வு முதலிய குணங்கள் விளங்கித் தோன்றச் செய்தலென்னும் அனுக்கிரகத்தைச் செய்கின்றான் என்பதாம்.
[* சார்ந்த தன்வண்ணமாந் தன்மையுடைய உயிர்கள் எக்காலத்தும் சிவனோடு பிரிப்பின்றி நிற்றல்பற்றித் தன்னுடைய தருமத்தையுடையது உயிரெனக் கூறப்பட்டது.]
      ஆன்மாக்களுடைய ஞானக்கிரியைகளை மறைக்கும் அநாதியாயுள்ள மலத்தின் அதிகாரமானது எதுவரையும் நிவிர்த்தி அடையவில்லையோ, அதுவரையும் பதியினுடைய அனுக்கிரக ரூபமான முத்தி பசுக்களுக்கு நிகழ்கிறதில்லை.
      மிருகேந்திரத்திலும் இவ்வாறே மலத்தினுடைய அதிகாரமும், திரோதான சத்தியினுடைய அதிகாரமும் நீங்குங் காலத்தில் அவற்றின் சத்திகளும் நீங்குதலால், உயிர்களுக்கெல்லாம் உறவினனாய் விளங்கும் பரமசிவன், அவ்வாறு சத்தி நீங்கப்பெற்று ஆன்மாவிற்கு முற்றுணர்வு முதலிய குணங்கள் விளங்கித் தோன்றச் செய்கின்றான் என்று கூறப்பட்டிருத்தல் காண்க.
      கண்ணினிடத்துள்ள படல முதலியனபோல் மலம் திரவியமாதலால் வைத்தியனுடைய தொழிலால் படலம் நீங்குமாறுபோலப் பரமசிவனுடைய தொழிலால் மலம் நீங்கவேண்டுமாதலால், படலத்தின் நீக்கம் அதன் பக்குவத்தை எதிர்பார்ப்பது போல், மல சத்தி திரோதான சத்திகளின் நீக்கமானது ஒருவிதமான பரிணாமமென்னும் மல பரிபாகத்தை எதிர்பார்க்கின்றது. மலத்தின் பரிபாகத்தைச் செய்வதற்காகவே பிரபுவான சிவபெருமான். ஆன்மாக்களறியாத வண்ணம் மறைந்து நின்றுகொண்டு, †“கலப்பில்லாதது பரிணமிக்காதுஎன்னும் நியாயத்தால் மாயா காரியமான தனுகரணபுவனபோகங்களின் சேர்க்கையைக் காரணமாகக் கொண்ட அநாதி கன்மானுபவ ரூபமான சம்சாரத்தை ஆன்மாக்களுக்குக் கூட்டுவிக்கின்றான். (இக்கூட்டத்தால் மலம் பரிபாகமடைகின்றது). [மோரின் கலப்பின்றி, பால் தயிராகப் பரிணமித்தல் இல்லை.] இவ்வாறு சம்சாரத்தை ஆன்மாக்களுக்குக் கூட்டுவிப்பதே படைத்தல், காத்தல், அழித்தலென்னும் தொழில்களை அனுசரித்த திரோதானம் என்னுந் தொழிலாகப் பரமசிவனுக்குக் கூறப்படுகின்றது. ஆகவே, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அனுக்கிரகித்தல் என்னும் ஐந்தொழில் புரியுங் கருணைக்கடலான பரமசிவனே கருணைக்கடலாயிருத்தலால் வழிபடத் தகுத்தவனென்பது பரமாசிரியர்களுடைய உபதேசக் கிரமமென்க.
      அந்தப் பரமசிவனை வழிபடுகின்றவனாயிருக்குந் தன்மை யாதெனில், தீக்ஷையினால் சுத்திபெற்ற ஆன்மாக்கள் அந்த வழிபாடு என்னுந் தொழிலுக்குப் பற்றுக்கோடாயிருத்தலேயாம். (அஃதாவது தீக்ஷையினால் சுத்தி பெற்றிருத்தனே பரமசிவனை வழிபடுதற்கு உரிய தன்மை என்பதாம்.)
      எதனாலெனின், தீக்ஷையால் சுத்திபெற்ற ஆன்மாவிடத்திற்றான் சமத்தன்மை நிகழ்தலாலென்க, இது பற்றியே நிருவாண தீக்ஷை பெற்ற சாதகர்கள் ஆசிரியத் தன்மை சித்தித்தற்பொருட்டுச் சித்தாந்த சாத்திரங்களையே ஆசிரியன் முகமாய் அறிகின்றனர். ஆசிரியத்தன்மை என்னும் அதிகாரம் ஞானம் ஒன்றினால் மாத்திரம் சித்திக்கத்தகுந்தது. ஞானமும் உபயோகத்தோடு கூடிய மூன்று பொருள்களை விடயமாகக்கொண்டு உபயோகப்படுகின்றது. அந்த மூன்று பொருள்கள், பதி, பசு, பாசங்களென்று அறியத்தகுந்தன. (ஆகவே, பதிஞானம், பசுஞானம், பாசஞானமென ஞானம் மூவகையாமாறு காண்க) அந்தப்பதி பசு பாசங்கள், சரியை கிரியை முதலியவற்றில் * உபயோகப்படுவனவாக காமிக முதலிய சித்தாந்த சாத்திரங்களில் இவ்வாறு கூறப்படவில்லை. [*வழிபடப்படுதல், வழிபடுதல், வழிபடுதற்குக் கருவியாதல் என்னும் இந்த முறையில் சரியை முதலியவற்றோடு பதி பசு பாசங்கட்கு உபயோகங்கங் காண்க.] எதனாலெனின், ஏனைய சாத்திரங்களனைத்தும் முற்றுணர்வில்லாத உயிர்களால் செய்யப்பட்டிருக்கின்றமையால் எல்லாப் பொருள்களையும் விளக்கஞ் செய்யா வகையாலென்க. அஃதாவது, சித்தாந்தமென்னுஞ் சிவாகமங்களை அருளிச் செய்த பரமசிவனுக்கு முற்றுணர்வு உடைமையானது அநாதியே பாசமின்மையால் நிச்சயிக்கப்படுகிறது. ஏனைய சாத்திரங்களைச் செய்தவர்களான மகரிஷிகள் பாசத்தால் தடுக்கப்பட்ட ஞானக் கிரியைகளையுடையராயிருத்தலால் அவர்களிடத்து முற்றுணர்வுடைமை பொருந்துகிறதில்லை. அன்றி, இவர்களுடைய அறிவானது துணையை விரும்புகின்றமைபற்றி ஏகதேசமாகப் பொருள்களையறியுந் தன்மை உடையது இவர்களும் பதிக்குக் கூறப்பட்ட (முற்று உணர்வுத் தன்மையென்னும்) சத்தியுடன் கூடினவர்களாயிருந்தால் பதி சம்பந்தமான சைவ சமயத்தையே சார்ந்திருப்பார்கள். ஆகையால் அந்தப் பதியால் சுதந்திரமாய்ச் செய்யப்பட்ட சாத்திரமானது எல்லாப் பொருள்களையும் விளக்கஞ் செய்வதுபற்றி சாதகர்களால் ஆசாரிய அபிஷேகத்தின் பொருட்டு அவசியம் அறியத்தக்கது. இந்தச் சிவசாத்திரங்களை அறியாதவர்களுக்கு முற்றுணர்வுத் தன்மை நிகழ்கிறதில்லையாகையால் அவர்கள் பிறருக்கு எவ்வாறு அனுக்கிரகஞ் செய்ய முடியும்? (முடியாது).
      அவ்வாறாயின், மறைகள் நித்தியங்களாயிருத்தலால் எல்லாப் பொருள்களையும் விளக்கஞ் செய்யும் தன்மை அந்த மறைகளுக்கே உரியதாகும்; அவ்வாறன்றி ஈசுவரனால் செய்யப்பட்ட ஆகமங்களுக்கு எல்லாப் பொருள்களையும் விளக்குந் தன்மை உண்டென்பது எவ்வாறு கூடுமெனின், இந்தக் கேள்வி பொருந்தாது எதனாலெனின், ஈசுவரனால் கூறப்பட்டது பற்றியே மறைகளுக்கும் எல்லாப் பொருள்களையும் விளக்கஞ் செய்யும் தன்மை உள்ளதே ஒழிய நித்தியமாயிருக்கின்றமையால் அத்தன்மை உள்ளதென்று கூறவில்லை யாதலாலென்க.
      அவ்வாறாயின், மறைகள் சிவாகமங்களென்னும் இவ்விரண்டில் ஒன்று பயனற்றதாகுமேயெனில், அஃதான்று, மிகவும் நுட்பமான பொருள்களையுடைய மறையானது ஒன்றோடொன்று மாறுபட்ட பல சமயிகளின் ஐயத்துக்கு இடமாயிருத்தலால் அந்த மறையின் சொற்களின் பொருள்களை விளக்கஞ் செய்விக்கும் சிவாகமங்கள் பலருக்கும் உபயோகமாகும். ஆதலால் இரண்டும் பயனுடையனவே என்று அறிந்து கொள்க. இவ்வாறே மறைகளின் சாரம் சிவாகமம் என்று நூல்களிலுங் கூறப்பட்டிருத்தல் காண்க.
      அவ்வாறாயின், இந்த ஆசாரியத் தன்மையானது (தீக்ஷை செய்தல் முதலிய அதிகாரமிருப்பது பற்றி) கட்டுப்படுத்துதல் என்னும் பாசமாகுமேயெனில், ஆகாது எதனாலெனின், எல்லாப் பாசங்களுடைய நீக்கத்தின் பின்னர் உண்டாகின்ற ஆசாரியத்தன்மையில் முற்றுணர்வுடைமை என்னும் சர்வஞ்ஞத்தன்மையுடன் விரோதமில்லாத அதிகார மல மாத்திரம் எஞ்சியிருத்தல் பற்றி இந்த ஆசாரியத்தன்மையானது அபரமோக்ஷமாயறியப் படுகின்றமையாலென்க. அங்ஙனமாயினும், ஆசாரியனுக்குத் தேகமிருத்தலால் பசுவோடு சமத்தன்மை நிகழுமெனில், ஆசாரியனுடைய தேகமானது சுத்தமாயையிலிருந்து உண்டானமயால் அந்தத் தேகம் அறிவை உண்டுபண்ணுமேயன்றி மோகத்தை உண்டுபண்ணாது. ஆதலால் பசுவோடு சமத்தன்மை நிகழாதென்க. பசுவினுடைய தேகமோவெனில், அறிவை உண்டு பண்ணாது மோகத்தையே உண்டுபண்ணும். எதனாலெனின், மோகத்தைச் செய்யும் அசுத்தி மாயையிலிருந்து உண்டானமையாலென்க.
      அங்ஙனமாயினும், ஆசாரியனுக்குப் பதியான பரம சிவனோடு சமத்தன்மை உண்டென்பது எவ்வாறு கூடுமெனில், கூறுகிறோம். அந்தப் பதியான பரமசிவன் தனக்கு அந்தரங்கமாயுள்ள தன்னுடைய சத்தி ரூபமான சரீரமிருப்பினும், பசுக்களுக்கு அனுக்கிரகஞ் செய்தற்பொருட்டு வெளிப் படையாயுள்ள சுத்த மாயா சம்பந்தமான வேறு சரீரத்தை விரும்புகிறான். அந்தச் சரீரம் கன்ம மற்றவனாயும், அதுபற்றி அசுத்தி மாயைக்கு மேற்பட்டவனாயுமிருக்கும் சுத்த போகத்திற்குரிய ஒருவனைச் சார்ந்தே இருக்கின்றது எவனைச் சார்ந்திருக்கின்றதோ அவனே ஆசாரியனாவன். ஆதலால் பதிக்கும் ஆசாரியனுக்கும் ஒரேவிதமான சரீர சம்பந்தம் இருத்தல் பற்றியும் ஒரேவிதமான தொழிலுடைமை பற்றியும் சமத்தன்மை உண்டென்பது நன்கறியத் தகுந்ததாகும். ஆதலினாற்றான் உலகத்தில் சிவனே குரு, குருவே சிவன் என அவ்விருவருக்கும் ஒற்றுமை கூறப்படுகின்றது.
      அவ்வாறாயின், ஆசாரியனுக்கும் பசுக்களுக்குக் கூறப்படுவது போல் பதியால் ஏவப்படும் தன்மை உண்டென்று நூல்களிற் கூறப்படுவது எவ்வாறு பொருந்துமெனில், அஃதுண்மையே. ஆயினும் குருவானவன் பசுக்கலைப்போல் துன்பமான போகங்களைத் தருங்காரியங்களில் ஈசுவரனால் ஏவப்படுகிறானில்லை. வேறேவ்விதமெனில், அந்த குருவானவன் பரமேசுவரனால் மிகத் தீவிரமான சத்திநிபாதத்தை அனுசரித்து நான்காவது தீக்ஷையாகிய ஆசாரியாபிஷேகத்தால் அனுக்கிரகஞ் செய்யப் பெற்றிருத்தலால் அனேகமாய்த் தனக்குச் சமானமாயிருத்தல் பற்றித் தனக்கு உரிமையான சுத்த போகத்திற்கு மாறு பாடில்லாத பிறருக்குப் பயன்றருந் தொழில்களிற்றான் ஏவப்படுகின்றான் என்றறிருந்து கொள்க. இவ்விதமான ஏவப்படுத் தன்மையானது பரமோக்ஷத்திற்கு மாறுபாடாகாது. எதனாலெனின், ஆசாரியத் தன்மையானது அதிகாரத்தினிறுதியில் சரீர நாசத்திற்குப் பின்னரே பூரணமான பரமோக்ஷத்தை அடையச் செய்கிறபடியாலென்க. இதுபற்றியே, ஆசாரியத்தன்மை அபரமோக்ஷமென்பது சித்தாந்தம்.
      எந்தத் சாதகத்தன்மையால் புருடர்கள் சித்தாந்த சாத்திரங்களைக் கேட்க அதிகாரமடைகின்றனரோ அந்தச் சாதகத்தன்மை எதுவெனில், கூறுகின்றோம். எந்தப் புருடனுக்கு மிகுதியான சத்திநிபாதம் நிகழ்ந்து அத்துவாக்களாறையும் சுத்தி செய்தலுடன் கூடிய மூன்றாவதான நிருவாண தீக்ஷை நிகழ்கின்றதோ அந்தப் புருடனே சாதகனாவன். அவனாற்றான் சித்தாந்த சாத்திரங்கள் அறியத்தகுந்தனவாகும்.
      அந்தத் சாதகத்தன்மை எவ்வாறுண்டாகுமெனில், யாதாவதொரு காலத்தில் பல பிறப்புக்களில் நிகழ்ந்த வாசனாவயத்தால் புண்ணிய காரியங்களைச் செய்கின்றவனாயும், யாதாவதொரு ஆச்சிரமத்தில் வசிப்பவனாயுமிருக்கும் யாதாவதொரு ஆன்மாவுக்கு யாதாவதொரு புண்ணிய நிகழ்ச்சியால் அநாதியாகவே அறிவை மறைத்திருக்கும் மலம் சிறிது பரிபாகமடையும் அடையவே மிகச் சிறிதான சத்திநிபாதம் நிகழும், நிகழவே, அந்தச் சத்தி நிபாதத்தை அனுசரித்ததாயும் சிவபெருமானிடத்துப் பக்தி சிரத்தை முதலியவற்றின் விளக்கத்தை உடையதாயும் சஞ்சித கன்மத்திற்குப் பரிபாகத்தை உண்டுபண்ணுவதாயும், சாஸ்திர விதிப்பிரகாரம் சிரஸில் சிவஹஸ்தத்தை வைத்தல் ரூபமாயுமுள்ள சமயமென்னும் யாதொரு தீக்ஷையானது, குருவழிபாடு கணபதி பூஜை சூரியபூஜை முதலியவை சித்திபதின் பொருட்டுச் செய்யப்படுகின்றதோ, அது, முதலாவதான தீக்ஷையாகும்.
      பின்னர், சமயதீக்ஷைபெற்ற ஆன்மாவுக்குச் சிறிது மலபரிபாகம் உண்டாகும். உண்டாகவே, சிறிது (மந்த) சத்திநிபாதம் நிகழும். அந்தச் சத்திநிபாதத்தை அனுசரித்தாயும், பத்தி முதிர்ச்சியுடன் கூடினதாயும் கன்ம முதலிய பாசங்களின் நாசத்தைச் செய்கிறதாயும், பிறப்பினாலுண்டான ஜாதி நசித்து வாகீசுவரி கர்ப்பத்தில் பிறத்தல் ரூபமாயும் உள்ள யாதொரு தீக்ஷையானது, மந்திரோபதேசத்தைப் பெறுதல் சிவலிங்க பூஜை செய்தல் முதலியவற்றில் உரிமை சித்திப்பதன் பொருட்டுச் செய்யப்படுகின்றதோ, அந்தத் தீக்ஷை இரண்டாவதான விசேட தீக்ஷையாகும்.
      பின்னர், தீவிர மலபரிபாகம் உண்டாகும். உண்டாகவே, தீவிரமான சத்திநிபாதம் நிகழும். அந்தச் சத்திநிபாதத்தை அனுசரித்ததாயும், முற்றுணர்வுத்தன்மை முதலிய ஆறு குணங்களும் விளங்கும்படிச் செய்வதாயும், கலை முதலிய ஆறத்துவாக்களின் சுத்தியால் மலம், மாயை, கன்மமென்னும் மூன்று பாசங்களுக்கும் நாசட்தைச் செய்வதாயுமுள்ள யாதொரு நிருவாண தீக்ஷையானது, நித்திய முதலிய சகல சிவதருமங்களையும் அனுட்டிப்பதின் பொருட்டுச் செய்யப்படுகின்றதோ, அது மூன்றாவதான தீக்ஷையாகும்.
      இந்த நிருவாணதீக்ஷையுடையவனே சித்தாந்த சாத்திரப்பொருள்களை அறியச் சமர்த்தனாகின்றான். எதனாலெனின், அவனே பசுத்தன்மை நீங்கினவனாய் சிவத்தன்மையின் விளக்கத்திற்கு உரியவனாகின்றானாதலாலென்க. முதலாவதும் இரண்டாவதுமான சமய விசேட தீக்ஷைகளைப் பெற்றவர் சித்தாந்த சாத்திரப் பொருள்களின் அறிவிற்கு உரியராகின்றனரில்லை. எதனாலெனின், அந்தத் தீக்ஷைகளை உடையார்க்குப் பசுத்தன்மை நீங்காமையாலென்க.
      அவ்வாறாயின், சமயதீக்ஷை பெற்றவனுக்கு முன்பிறப்பு ரூபமான சாதிச் சேர்க்கையிருத்தலால் பசுத்தன்மை நீங்காமை பற்றிச் சித்தாந்த சாத்திரங்களைக் கேட்பதில் அதிகாரமில்லை என்பது கூடும். விசேட தீக்ஷைபெற்ற புத்திரனுக்கு வாகீசுவரீ கர்பத்திலிருந்து பிறப்புண்டானமையின் சித்தாந்த சாத்திரங்களைக் கேட்பதில் அதிகாரமில்லை என்பது எவ்வாறு கூடுமெனின், அஃதுண்மையே. வாகீசுவரீ கர்ப்பத்திலிருந்து உண்டாகும் பிறப்பு ரூபமான பிறவி மாத்திரம் சிவத்தன்மையை விளக்குகிறதில்லை வேறு என்னையோவெனில், பசுத்தன்மை என்னும் மலத்தின் பரிபாக விசேடத்தால் சாதிக்கத் தகுந்ததாயும், வேறு காலத்தில் நிகழக்கூடியதாயுமுள்ள சமஸ்கார விசேடமும் சேர்ந்து தான் சிவத்தன்மையை விளக்குவதாகும் எதுபோலுமெனின், அந்தணப்பெண் வயிற்றுப் பிறந்த அந்தணனொருவனுக்கு அப்பெண்ணினிடத்துண்டான பிறப்பு மாத்திரத்தால் மறைகளோதுதற்குத் தகுதியான அந்தணத்தன்மை சித்திக்காமல் வயதின் முதிர்ச்சியால் அடையத்தகுந்த உபநயன முதலிய சம்ஸ்காரங்களுஞ் சேர்ந்து மறைகளோதுதற்குத் தகுதியான அந்தணத் தன்மை சித்திப்பது போலுமென்க. இவ்வாறே விசேட தீக்ஷையால் வாகீசுவரீ கர்ப்பத்தில் பிறப்படைந்த புருடனிடத்தில் நீண்டகாலமாய்ச் சிவத்தன்மை விளங்கவொட்டாது செய்யும் மலத்தின் தன்மையை விலக்கிச் செய்யப்படும் நிருவாண தீக்ஷையானது, சித்தாந்த சாத்திர ஞானத்துக்கு உரிமையான சாதகத்தன்மையைத் தருமென அறிந்து கொள்க.
      அவ்வாறாயின், இத்தன்மையினையுடைய சாதகனுக்கு மலம் மாயை முதலிய எல்லாப் பாசங்களும் நிருவாண தீக்ஷையினாலேயே ஒழிவடைகிற படியால் ஆசாரியத்தன்மை பயனற்றதாகுமேயெனில், ஆகாது தீக்ஷைபெற்ற ஆன்மா அந்தந்தச் சமயத்தில் பாசமற்றவனாயிருப்பினும், தீக்ஷைக்குப்பின் செய்யக்கூடிய அபிஷேகத்தினாற்றான் அந்த ஆன்மாவிற்குச் சிவத்தன்மையின் விளக்கம் நிகழ்கின்றது. அந்த அபிஷேகமும் சிவபூஜையோடு இடையறாத சித்தாந்த சாத்திரங்களின் பயிற்சியினாற்றான் முடிவையடைகிறது. எது போலுமெனில், உலக்த்தில் ஒருவனுடைய நோயானது வைத்திய சாத்திரங்களின் பயிற்சிமாத்திரத்தால் நிவிருத்தியடையாமல் அச்சாத்திரப் பயிற்சியோடு பத்தியத்துடன் கூடிய மருந்தை உட்கொண்டே நிவிருத்தி யடைகிறது போலுமென்க இவ்வாறே சாதகனாலடையத்தகுந்த பரமோக்ஷட்த்திற்கு வழியாயுள்ள அபரமோக்ஷரூபமான அபிஷேகமானது ஆசாரியத்தன்மைக்கு உரியதாகும்.

      ஶ்ரீ சூரிய சிவாசாரியார் இயற்றிய சைவ சித்தாந்த பரிபாஷை தமிழ் மொழி பெயர்ப்பு நூலில் முதலாவது உபோத்காத பரிச்சேதம் முற்றிற்று.

No comments:

Post a Comment